Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
சொகுசான பயணம், சரியான நேரத்திற்கு தங்களை தேடி வரும் உணவு, குளிர்சாதன வசதி என சிறப்பு ஏற்பாடுகள் இந்த ரெயிலில் பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் (படுக்கை வசதி கொண்ட) ரெயில்களில், இனி ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்புப் பட்டியல் முறைகள் இருக்காது என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்த விரிவான கட்டண விவரங்களையும் ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களில் பயணம் செய்ய, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
காத்திருப்பு பட்டியல் மற்றும் ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகள் மட்டுமின்றி, பகுதி அளவு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் இந்த ரெயில்களில் வழங்கப்படாது.
முன்பதிவு காலம் தொடங்கும் போதே அனைத்து படுக்கை வசதிகளும் பயணிகளுக்குக் கிடைக்கும். இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கான 'டியூட்டி பாஸ்' ஆகிய ஒதுக்கீடுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
டிக்கெட் ரத்து செய்து பணத்தைப் திரும்பப் பெறும் விதிமுறைகள், மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களைப் போலவே இதிலும் தொடரும்.
குறைந்தபட்சம் 400 கி.மீ. வரை ஏ.சி. முதல் வகுப்பு ரூ.1,520, ஏ.சி. 2-ம் வகுப்பு ரூ.1,240, ஏ.சி. 3-ம் வகுப்பு ரூ.960 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஐ.சி.எப். மற்றும் பெமல் நிறுவனங்கள் இணைந்து 10 ரெயில்களைத் தயாரித்து வருகின்றன. இதில் முதல் ரெயில் கவுஹாத்தி-ஹவுரா பாதையில் இயக்கப்பட உள்ளது. இரண்டாவது ரெயில் வடக்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து தயாராகும் ரெயில்களும் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் புற ரெயில் வேக்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM