Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகை வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு வருவார்கள் என்பதால், அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர போலீசார் கமிஷனர் அருண் உத்தரப்படி விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை பெருநகர காவல் கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் 16 ஆயிரம் போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் செய்யப்பட்டள்ள ஏற்பாடுகள் விவரம் வருமாறு:
மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை: உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர்.
மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும். காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும்.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் விவரங்கள் பெறப்பட்டு, மேற்படி பிரத்யேக அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். மெரினா கடற்கரையில் 4 டிரோன் கேமராக்கள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 4 டிரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b