Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 13 ஜனவரி (ஹி.ச.)
தவறு செய்து தண்டனை அனுபவிக்கக்கூடியவர்களை அடைக்கக்கூடிய இடமாக இருக்கும் சிறைச் சாலை, தொடக்க காலத்தில் மிகவும் கடினமான இடமாக இருந்தது. காலப்போக்கில் பல வசதிகளை கொண்ட இடமாக சிறைச்சாலைகள் மாறிவிட்டன.
அது மட்டுமின்றி தவறு செய்து தண்டனை அனுபவிப்பவர்கள், தண்டனை காலத்தில் திருந்துவதற்கான ஒரு இடமாகவும் மாறியிருக்கிறது.
அதற்காக அந்தந்த மாநில அரசுகள், தங்களது மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு பல்வேறு தொழில்களை கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி, அந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஊதியத்தையும் கொடுக்கிறது. இதனால் பல கைதிகள் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வெளியே சென்றபிறகு, ஜெயிலில் பார்த்த தொழிலை தொடர்ந்து பார்த்து வாழ்க்கையை நடத்தும் வகையில் பல கைதிகள் வடிவமைக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கான ஊதியத்தை அம்மாநில அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் இருக்கின்றன. கொல்லம் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட மற்றும் கிளை சிறைகளும் இருக்கின்றன.
இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பயன்படுத்தி துணி, தோல் மற்றும் அலுமினிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி பல்வேறு வேலைகளும் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஈடுபடும் கைதிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கைதிகளுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுவும் ஊதியம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. திறமையான வேலையில் ஈடுபடுபவர்களின் ஊதியம் ரூ.152 ஆக இருந்தது.
அது தற்போது 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் பாதியளவு திறமையான வேலை செய்பவர்களுக்கான ஊதியம் 127 ரூபாயில் இருந்து 560 ரூபாயாகவும், திறமையில்லாத வேலை பார்ப்பவர்களுக்கான ஊதியம் ரூ.63-ல் இருந்து ரூ.530 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கேரள மாநிலத்தில் கைதிகளுக்கான சம்பளம் இவ்வளவு அதிகமாக உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இந்த ஊதிய உயர்வு மூலமாக கேரள ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் பயன்பெறுவார்கள்.
Hindusthan Samachar / GOKILA arumugam