சட்டவிரோத குவாரிகள் - அறிக்கை தாக்கல் செய்ய கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
மதுரை, 13 ஜனவரி (ஹி.ச.) மணப்பாறையைச் சேர்ந்த திருப்பதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய பகுதியாக மணப்பாறை தாலுகா இருந்து வருகிறது மணப்பாறை தாலுகா, சுற்று கிராமங்கள
Madurai High Court


மதுரை, 13 ஜனவரி (ஹி.ச.)

மணப்பாறையைச் சேர்ந்த திருப்பதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், திருச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய பகுதியாக மணப்பாறை தாலுகா இருந்து வருகிறது மணப்பாறை தாலுகா, சுற்று கிராமங்களில் பல இடங்களில் சட்டவிரோதமாக ஆற்றுமண் மற்றும் கிராவல் மண் திருடப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் சேவலூர் கிராமத்தில் உள்ள மலை குன்றில் 2120 யூனிட் செம்மண் எடுக்க வட்டாட்சியர் அனுமதி அளித்திருந்தார்.ஆனால் ஆரோக்கியசாமி மற்றும் மாரியபாக்கியராணி ஆகியோர் சுமார் 20,000 கன மீட்டர் மணலை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துள்ளனர்.

இதே போல் தோப்பம்பட்டி கிராமத்தில் உள்ள பாறைகளை அழித்து 50,000 கன மீட்டர் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மரவனூர் கிராமத்தில் உள்ள குளம் மற்றும் கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், வாகன உரிமையாளர்கள் மீதோ சட்ட விரோத குவாரிகள் நடத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இந்த சட்டவிரோத குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பல முறை புகார் அளித்தும், மாவட்ட ஆட்சியர் கனிமவளத்துறையினர் புகார் அளித்தும் பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை செய்த நீதிபதிகள் ஏற்கனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN