பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.) முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (13.1.2026) பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் கால்நடை தீவன உற்பத்தி ஆலை
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)

முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (13.1.2026) பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் கால்நடை தீவன உற்பத்தி ஆலை, ஊறுகாய்புல் தீவன கட்டுகள் உற்பத்தி ஆலை, நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, 5 நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடங்கள் ஆகிய 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

ஆவின் நிறுவனத்தின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் பின்வருமாறு:

பால் உற்பத்தியாளர்களுக்கு தரமான கால்நடை தீவன தேவையை பூர்த்தி செய்து பால் உற்பத்தியை அதிகரிக்கவும், தற்போது அதிகரித்து வரும் கால்நடை தீவன தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடியில் நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட கால்நடை தீவன உற்பத்தி ஆலை.

கோடை மற்றும் வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு வருடம் முழுவதும் தரமான பசுந்தீவன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் சிறப்பு பகுதி வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் 6.72 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 25 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஊறுகாய்புல் தீவன கட்டுகள் உற்பத்தி ஆலை.

ஆவின் விற்பனை அதிகரிக்கவும், நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 21.57 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 6,000 லிட்டர் ஐஸ்கீரிம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் 10,000 லிட்டர் நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

பாலின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் திருவண்ணாமலை, கடலூர், கரூர், தருமபுரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் 2.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிரியல் ஆய்வு கூடங்கள்.

என மொத்தம் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

Hindusthan Samachar / vidya.b