புதுச்சேரியில் தீக்கு இரையான ஆம்னி பேருந்து - 13 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்
புதுச்சேரி, 13 ஜனவரி (ஹி.ச.) புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று (ஜனவரி 12) இரவு 9 மணியளவில் புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்தில் 13 பயணிகள் பயணம் செய்தனர். வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் இயக்கிய இந்த பேருந்தானது புதுச
புதுச்சேரியிலில் தீக்கு இரையான ஆம்னி பேருந்து - 13 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்


புதுச்சேரி, 13 ஜனவரி (ஹி.ச.)

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று (ஜனவரி 12) இரவு 9 மணியளவில் புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்தில் 13 பயணிகள் பயணம் செய்தனர்.

வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் இயக்கிய இந்த பேருந்தானது புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிது தூரத்தில் உள்ள 100 அடி சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பேருந்தின் பின்பக்கத்தில் திடீரென தீப்பிடித்தது.

என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியதைக் கவனிக்காத பேருந்து ஓட்டுநர், தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது பேருந்தின் பின்னால் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருவர், பேருந்தில் தீப்பிடித்திருப்பதை உடனடியாகக் கவனித்தார். அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பேருந்தை முந்திச் சென்று, ஓட்டுநரை எச்சரித்து பேருந்தை நிறுத்தச் செய்தார். தீ விபத்து குறித்து அறிந்ததும் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்த, உள்ளே இருந்த 13 பயணிகளும் பதற்றத்துடன் விரைவாகக் கீழே இறங்கினர்.

பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் பரவியது. ஆட்டோ ஓட்டுநரின் சமயோசிதமான செயலால் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 13 உயிர்கள் காக்கப்பட்டன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b