Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 28ம் தேதி துவங்கவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில், விதைகள் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
வரைவு மசோதா கடந்த ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட நிலையில், பொதுமக்களின் கருத்துக்காக அதன் நகல் வெளியிடப்பட்டது. தற்போதுள்ள விதைகள் சட்டம், 1966ல் இயற்றப்பட்டு, 1968 - 6ம் ஆண்டு காலக்கட்டத்தில் அமலுக்கு வந்தது. கடைசியாக 1972ல் இந்த சட்டம் திருத்தப்பட்டது.
கடந்த காலங்களில் இதற்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தினாலும், வேளாண் அமைப்புகளின் வலுவான எதிர்ப்பாலும் புதிய சட்டம் இயற்றப்படவில்லை.
இந்தச் சூழலில், மத்திய வேளாண் அமைச்சர் அறிவித்தபடி கடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், விதைகள் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இம்மசோதா குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குப்படுத்துவதையும், விவசாயிகளுக்கு மலிவு விலையில் உயர்தர விதைகள் கிடைப்பதையும் இம்மசோதா உறுதி செய்கிறது.
போலியான, தரமற்ற விதைகளின் விற்பனையையும் தடுக்கிறது. மேலும், போலி விதைகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்தும் விவசாயிகளை பாதுகாக்க வகை செய்கிறது. புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், உலகளாவிய ரகங்களுக்காக, விதை இறக்குமதியை தாராள மயமாக்கும் அம்சங்களும் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
தவிர, விதை வினியோக தொடரில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதும் இம்மசோதாவின் முக்கிய நோக்கம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
புதிய மசோதாவில் விதைகள், நிறுவனங்கள், வினியோகஸ் தர்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகளின் பதிவு உள்ளிட்ட விதைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களும் கொண்டு வரப்பட்டிருந்தாலும், தரமற்ற மற்றும் போலி விதைகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் இழப்பீடு பெறும் வகையிலான அம்சங்களும் இடம் பெற வேண்டும் என, வேளாண் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதனால், இம்மசோதா நடைமுறைக்கு வராத நிலையில், பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இம்முறை மசோதாவுக்கு ஆட்சேபனை எழுந்தால், பார்லிமென்ட் நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM