Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 13 ஜனவரி (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள எசையனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகைக்காக புதிய துணிகள் வாங்க குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சக்திவேல் அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போயிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை காலம் என்பதால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளியே சென்ற நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது குடும்பத்தினரை மனமுடைந்தவர்களாக மாற்றியுள்ளது.
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்து, திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், வீட்டில் உள்ள பொருட்களை சிதறவிடாமல், மதிப்புமிக்க பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது கொள்ளையர்கள் முன் திட்டமிட்டு செயல்பட்டதை காட்டுகிறது எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சக்திவேல் உடனடியாக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவு, பீரோ உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலர் வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்லும் சூழல் இருப்பதால், இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் எசையனூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார்
தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN