Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)
இந்தியா முழுவதும் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக, உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (ஜனவரி 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தெருநாய்கள் நல ஆர்வலர் ஒருவரின் சார்பாக ஆஜரான வக்கீல் ஒருவர் வாதிடுகையில் கூறியதாவது,
டெல்லியில் 200 தெருநாய்கள் பராமரிக்கும் 80 வயது மூதாட்டி சார்பாக வாதிடுகிறேன். டெல்லியில் நாய் அம்மா என்று மூதாட்டி அழைக்கப்பட்டு வருகிறார். தெரு நாய்களை தத்தெடுப்பதற்கான தேசிய கொள்கை கொண்டு வர பரிசீலிக்க வேண்டும்.
வீட்டில் 8-10 நாய்களை வைத்திருக்கும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். ஊக்கத்தொகை கருத்தடை மற்றும் தடுப்பூசி போன்ற செலவுக்கு பயன்படும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா கூறியதாவது,
2011 ம் ஆண்டு நீதிபதியாக நான் பதவி உயர்வு பெற்றதிலிருந்து, இவைதான் நான் கேட்ட மிக நீண்ட வாதங்கள். இதுவரை யாரும் மனிதர்களுக்காக இவ்வளவு நீண்ட நேரம் வாதிட்டதில்லை.
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் தெருநாய்கள் நல ஆர்வலர்களின் சார்பாக பல வக்கீல்கள் வாதாடினர். ஆனால் மனிதர்கள் சார்பாக யாரும் வாதிடவில்லை, கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று கூறினார்.
மேலும், எந்தவொரு குழந்தைக்கோ அல்லது முதியவருக்கோ நாய் கடித்து காயம் அல்லது மரணம் அடைந்த பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநிலங்கள் இழப்பீடு தொகை செலுத்த வேண்டும்.
தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b