கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஜனவரி 18 ஆம் தேதி தைதி அமாவாசை விழா
கன்னியாகுமரி, 13 ஜனவரி (ஹி.ச.) உலக பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டடப்படும் தை அமாவாசை விழா இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வ
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஜனவரி 18 ஆம் தேதி தை அமாவாசை விழா


கன்னியாகுமரி, 13 ஜனவரி (ஹி.ச.)

உலக பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டடப்படும் தை அமாவாசை விழா இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கிறது.

அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும், உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை, உச்சிகால பூஜை,

உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடைபெறும். அதன் பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

தை அமாவாசையையொட்டி அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். பின்னர் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்வார்கள்.

அதன்பிறகு கடலில் புனித நீராடிவிட்டு ஈரத்துணியுடன் வந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள்.

தை அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபடுவார்கள்.

அம்மன் வீதி உலா முடிந்தபிறகு இரஷீ 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம்வரச் செய்கிறார்கள்.

பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்தன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Hindusthan Samachar / vidya.b