டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் விஜய் - 19ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்பு
புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.) த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வந்தார். கரூருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி சென்றார். அங்கு பேருந்தில் நின்று பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி
டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் விஜய் - 19-ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்பு


புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)

த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வந்தார். கரூருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி சென்றார்.

அங்கு பேருந்தில் நின்று பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரத்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.

கரூரில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், த.வெ.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் கடந்த மாத இறுதியில் மூன்று நாட்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களுடன் கரூர் மாவட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கரூர் சம்பவத்தின் பெருங்கூட்டத்துக்கு காரணமான விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்து, ஜனவரி 12-ஆம் தேதி (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதே போல் போலீஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். சி.பி.ஐ. சம்மனை ஏற்று, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே மாலை 6.30 மணிக்கு விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

நேற்று விசாரணை முடிந்த பிறகு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய விஜய், இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

விஜய்யை 19-ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM