Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 14 ஜனவரி (ஹி.ச)
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தை பிரம்மோற்சவம் நாளை (15.1.2025) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தினமும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
முதல் நாள் (15.1.2026) விடியற்காலை 5.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 7 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும், 11 மணிக்கு திருமஞ்சனம், மாலை 3 மணிக்கு பேரிதாடனம் இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இரண்டாம் நாளான 16ம் தேதி காலை 7.30 மணிக்கு ஹம்ச வாகன புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சூர்ய பிரபை புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஐந்தாம் நாளான 19ம் தேதி காலை 5 மணிக்கு நாச்சியார் திருக்கோலம் புறப்பாடும், 10 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு யாளி வாகனம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆறாம் நாளான 20ம் தேதி காலை 5 மணிக்கு சூர்ணாபிஷேகம், 7 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலம் வெள்ளி சப்பரம் புறப்பாடு, இரவு 8.30 மணிக்கு யானை வாகனம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏமாம் நாளான 21ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு பகவான் தேருக்கு எழுந்தருள்கிறார். 7 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. மாலை 7 மணிக்கு தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு தேரிலிருந்து கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
எட்டாம் நாளான 22ம் தேதி மாலை 3.30 மணிக்கு திருப்பாதம்சாடி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு குதிரை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாளான 23ம் தேதி காலை 5 மணிக்கு ஆள்மேல் பல்லக்கு புறப்பாடு நிகழ்ச்சி, 10 மணிக்கு திருமஞ்சனம், 11 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு விஜயகோடி விமானம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் கடைசி நாளான 24ம் தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு த்வாதஸ ஆராதனம், இரவு 7.30 மணிக்கு வெட்டிவேர் சப்பரத்தில் பகவான் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவில் அகோபில மடத்தின் 46-வது ஜீயர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் கலந்து கொள்கிறார்.
Hindusthan Samachar / vidya.b