Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக வரும், போகிப் பண்டிகையின் போது, அனைவரும் வீடுகளில் உள்ள பழைய கழிவு பொருட்கள் போன்றவைகளை வீட்டுக்கு வெளியே தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது.
அதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், போகிப் பண்டிகையை ஒட்டி பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள், உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு, அதிகாலையில் எரிப்பதால், கடுமையான புகைமூட்டங்கள் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியை சூழ்ந்து கொள்கின்றன. அதோடு பனிமூட்டமும், அதிகாலை நேரத்தில் இருப்பதால், ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படுகிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இதில் அதிகபட்சமாக, கடந்த 2018 ஆம் ஆண்டு, 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள், மொத்தம் 118 விமான சேவைகள், போகிப் பண்டிகை புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டன. கடந்த 2024 ஆம் ஆண்டு, போகிப் பண்டிகை புகை மூட்டம், பனிமூட்டம் காரணமாக, 27 வருகை விமானங்கள் 24 புறப்படு விமானங்கள் 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
2025 ஆம் ஆண்டு, போகிப் பண்டிகையின் போது அதைப்போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி, இந்திய விமான நிலைய ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 4 மணியிலிருந்து, காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் போன்றவைகளின் நேரங்களை மாற்றி அமைத்தது.
அதன்படி சுமார் 30 வருகை, புறப்பாடு விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, பயணிகளுக்கு முன்னதாகவே, விமான நேரங்கள் மாற்றம் குறித்து குறுஞ்செய்தி தகவல்கள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டு போகிப் பண்டிகை, இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இன்று சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், போகி பண்டிகையை ஒட்டி, பழைய கழிவுகள், குப்பை கூழங்களை எரிப்பதால், இன்று அதிகாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்த்து, சென்னை விமான நிலையத்தில், சில விமானங்கள் ரத்து சில விமானங்கள், கால தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று நேற்றே அறிவிக்கப்பட்டு விட்டது.
அதன்படி இன்று அதிகாலை 3.05 மணிக்கு புனே செல்லும் விமானம், காலை 6.35 மணிக்கு கோவை செல்லும் விமானம், காலை 7.15 மணிக்கு, மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு டெல்லி செல்லும் விமானம், ஆகிய 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு, சென்னை வரும் விமானம் காலை 6.35 மணிக்கு மும்பையில் இருந்து வரும் விமானம், காலை 7.10 மணிக்கு புனேவில் இருந்து வரும் விமானம், காலை 9.10 மணிக்கு, கோவையிலிருந்து வரும் விமானம், ஆகிய 4 வருகை விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் சென்னையில் இருந்து இன்று காலை 5.40 மணிக்கு விஜயவாடா செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.40 மணிக்கும், காலை 6.10 மணிக்கு, சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக, காலை 9.10 மணிக்கும், காலை 6.20 மணிக்கு விசாகப்பட்டினம் செல்ல வேண்டிய விமானம் காலை 7.30 மணிக்கும், காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து மஸ்கட் செல்ல வேண்டிய விமானம் காலை 10.15 மணிக்கும், காலை 7.40 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய விமானம் காலை 8.40 மணிக்கும், காலை 8.30 மணிக்கு, பெங்களூர் செல்ல வேண்டிய விமானம், காலை 9.30 மணிக்கும், காலை 9.10 மணிக்கு திருச்சி செல்ல வேண்டிய விமானம், காலை 10.10 மணிக்கும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
அதைப்போல் சென்னைக்கு சிங்கப்பூரில் இருந்து காலை 5.55 மணிக்கு வரவேண்டிய விமானம் காலை 8.20 மணிக்கும், மஸ்கட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு வரவேண்டிய விமானம், காலை 9 மணிக்கும், கோலாலம்பூரில் இருந்து காலை 7 மணிக்கு வர வேண்டிய விமானம், காலை 8.40 மணிக்கும் தாமதமாக வந்து கொண்டு இருக்கின்றன.
இதை போல் சென்னை விமான நிலையத்தில் இன்று 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 7 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்களும், மொத்தம் 10 விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.
இந்த 8 விமானங்கள் ரத்து, 10 விமானங்கள் தாமதங்கள் அனைத்தும், போகி புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் ஆகியவற்றை எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தந்த விமான நிறுவனங்கள் முன்னதாகவே பயணிகளுக்கு அறிவிப்புகள் கொடுத்துவிட்டு எடுத்த நடவடிக்கை.
ஆனால் சென்னை விமான நிலைய பகுதியில் காலை 7 மணி வரையில், பெரிய அளவு புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN