Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)
சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சேவையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் ‘தமிழக ஆளுநர் விருதுகள்-2025’ தொடர்பான அறிவிப்பு கடந்த 2025 ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
இவ்விருதுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தேர்வுக்குழு ஆய்வு செய்தது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:
சமூக சேவை பிரிவு:
சமூக சேவை பிரிவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் வெங்கட்ராமன் நினைவு அறக்கட்டளையும், தனி நபர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஆர்.சிவா, திருச்சியைச் சேர்ந்த பி.விஜயகுமார் ஆகியோரும் விருது பெறுகின்றனர். இதில், வெங்கட்ராமன் நினைவு அறக்கட்டளை, கோவளம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்தவும் சேவை ஆற்றி வருகிறது.
அதேபோல், ஆர்.சிவா, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் சமூக மறுசீரமைப்புக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். பி.விஜயகுமார், மயானங்களில் கைவிடப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து கண்ணியமான பிரியா விடை பணியை மேற்கொண்டு வருகிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் ராமநாதபுரம் பசுமை ராமேசுவரம் அறக்கட்டளையும், தனி நபர் பிரிவில் கோவையைச் சேர்ந்த ஆர்.மணிகண்டனும் விருது பெறுகின்றனர். பசுமை ராமேசுவரம் அறக்கட்டளை, ராமேசுவரத்தில் கடலோரப் பகுதிகள் உள்பட அங்குள்ள நீர்நிலைகள், தாவரங்கள், விலங்கினங்கள் புத்துயிர் பெறுவதில் பெரும் பங்காற்றி வருகிறது.
ஆர். மணிகண்டன், கோவை முழுவதும் உள்ள நீர்நிலைகளை புத்துயிர் பெற வைப்பதிலும் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுப்பதிலும் முக்கியப்பங்காற்றி வருகிறார்.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அமைப்புகளுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும், தனிநபர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
ஜனவரி 26-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் விருதாளர்களுக்கு விருது வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி கவுரவிப்பார் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b