Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 ஜனவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை தை முதல் நாள் பொங்கல் அன்று, ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான விழா மேடை, காளைகள் பரிசோதனை செய்யும் இடம், போட்டியில் பங்கேற்க வரும் காளைகளை வரிசைப்படுத்துவதற்கான தடுப்பு வேலி, போட்டி நடைபெறும் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
காளைகளும் வீரர்களும் காயம் அடையாமல் இருப்பதற்காக தேங்காய் நார் பதிப்பு, காளைகளை சேகரிக்கும் பகுதி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், மதுரை மாநகராட்சி சார்பில் குடிநீர், நடமாடும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான காளைகளை களம் இறக்குவதற்காக, தண்டவாள (தள்ளுவாடி) வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.அதற்கான வண்ணம் தீட்டும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
வாடிவாசல், மாடுகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், அவனியாபுரம் பேருந்து நிலையம், பெரியார் சிலை மற்றும் வெள்ளைக்கல் பிரிவு, திருப்பரங்குன்றம் - முத்துப் பட்டி பிரிவு ஆகிய 5 இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வரும் 16-ந் தேதி பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
அதேபோல், 17-ந் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b