ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை!
புதுடெல்லி, 14 ஜனவரி (ஹி.ச.) தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததை அடுத்து படத்தின் வ
சுப்ரீம் கோர்ட்டில் நாளை ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கு விசாரணை


புதுடெல்லி, 14 ஜனவரி (ஹி.ச.)

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததை அடுத்து படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இதையடுத்து திரைப்படத்தை தயாரித்த கே.வி.என். நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு, ஜனநாயகன் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கள் அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் வழங்கி கடந்த 9ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவை அன்றைய தினமே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் பிறப்பித்ததோடு, வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்தால் எங்கள் தரப்பு கருத்துக்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அந்த மனுவில் இருந்த பிழைகள் திருத்தப்படாமல் இருந்தன.

அனைத்து பிழைகளும் திருத்தப்பட்டதை அடுத்து, வழக்கிற்கான எண் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்பட தணிக்கை தொடர்பான வழக்கை ஜனவரி 15-ல் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஜனநாயகன் பட மேல்முறையீட்டு மனு ஜனவரி 19-ல் விசாரணை என உத்தேச பட்டியல் வெளியாகி இருந்தது.

Hindusthan Samachar / JANAKI RAM