Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 14 ஜனவரி(ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாட்சியம் இல்லாத ஒன்று என்றும் ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் ஒரே அரசு என்பது இருக்க முடியும் என்றும் ஆனால் ஜனநாயக முறையில் இயங்கும் நம் நாட்டில் அப்படி இருக்க முடியாது என்றும் எனவே நமது ஆட்சி முறைக்கு அது எதிரானது என்றும் கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று கூறுகிறார்கள் ஆனால் இந்தியாவை பொறுத்தவரைக்கும் தேர்தலுக்கு அவ்வளவு பெரிய செலவுகள் ஆவது இல்லை எனவும் ஆண்டுக்கு 5 முதல் 6 தேர்தல்கள் நடப்பது நல்லது என்றும் அடிக்கடி தேர்தல் வருவதால் தான் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும், அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் வந்தால் ஆட்சியில் இருப்பவர்கள் மெத்தனமாக இருப்பார்கள் என்றும் மாநில தேர்தல் மூலமாக சில சமயம் மக்கள் மத்திய அரசுக்கு சில பாடத்தை புகட்டுவார்கள் என்றும் அடிக்கடி தேர்தல் வந்தால் தான் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடிகிறது என்றும் விளக்கம் அளித்தார்.
பராசக்தியோ ஜனநாயகனோ இரண்டு படத்தையும் நான் பார்ப்பதாக இல்லை என்றும் திரைப்படத்தை வைத்து தமிழ்நாடு அரசியலை நிர்ணயம் செய்யலாம் என நினைத்தால் அர்னால்டு ஸ்வாட்ஸ்நேக்கர் எப்போதோ தமிழ்நாடு முதலமைச்சராகி இருப்பார் எனவும் ஒரு காலத்தில் அவரது திரைப்படங்கள் இங்கு நன்றாக ஓடியது என்றும் திரைப்படத்தை வைத்து தமிழ்நாட்டு அரசியலையோ மக்களின் எதிர்பார்ப்பையோ மக்கள் மனநிலையோ யாரும் வெளிப்படுத்த நினைத்தால் தமிழ்நாடு அரசு தெளிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம் என கூறிய அவர், என்னை பொருத்தவரை இரண்டு படத்தையும் வியாபார நோக்கில் படம் எடுத்து இருக்கிறார்கள் அவர்களுக்கு லாப நஷ்டம் வருவது குறித்து எனக்கு கவலை கிடையாது அந்த இரண்டு படத்தையும் நான் பார்ப்பதாக இல்லை என்றும் தெரிவித்தார்.
பராசக்தி படம் என்ன சரித்திர படமா என்றும் தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இது தேவையற்ற பிரச்சனை என்றும் தமிழ்நாட்டில் தேவையான பிரச்சனைகள் நிறைய உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒரு பொழுது போக்கிற்காக படத்தை பார்ப்பார்கள் அதை தவிர வேறு எந்த ஒரு முக்கியத்துவத்தையும் இந்த படங்களுக்கு கொடுக்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது குறித்து பேசிய அவர்,
இது புதிதானது ஒன்றும் அல்ல எல்லா அரசியல் கட்சிக்கும் உள்ள எதார்த்த எதிர்பார்ப்பு என்றும் எங்கள் பிரதிநிதிகள் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும், கணிசமானவர்கள் வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் கட்சி உள்ளது என்றும் இது புதிதான சிந்தனை என்று இல்லை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உள்ள எண்ணம் தான் எனவும் விளக்கம் அளித்தார்.
இதேபோல் கடந்த 1967 லிருந்து காங்கிரஸ் நேரடி ஆட்சியில் இல்லை என்பதால் அன்று முதல் பல எதிர்பார்ப்புகள் உள்ளது என்றும் சில சமயங்களில் வாய்ப்பு வந்தது ,ஆனால் அதை நழுவ விட்டோம் என்றும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது புதுமையான கருத்து கிடையாது என்றும் தேர்தலை சந்திக்கின்ற ஏதாவது ஒரு கட்சிக்கு இந்த எண்ணம் இல்லை என்று சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் அதன் அடிப்படையிலேயே விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்றும் கூறியதுடன் விஜய்க்கு ஆதரவு இருக்கிறது அதனால் வாக்குகள் கிடைக்கும் ஆனால் அந்த ஓட்டு சீட்டாக மாறுமா என்பது எனக்கு தெரியாது என்றும் ஆதரவு ஓட்டாக மாறாது அந்த ஓட்டு சீட்டாக மாறாது என்றும் கூறினார்.
விஜய்க்கு வரக்கூடிய கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
அவர் ரசிகர் மன்றம் அதிகம் இருக்கிறது அதனால் சூப்பர் ஸ்டாரை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருகிறார்கள் என்றுதான் எடுக்க வேண்டுமே தவிர அவர் கொள்கை பிரகடனம் செய்வதற்காக அந்த கூட்டம் வரவில்லை அவர் ஒரு கொள்கை பிரகடனம் செய்வது கிடையாது என்றும் அவர் ஒரு பிரபலமான நடிகர் அவருக்கான ரசிகர் கூட்டம் இருக்கிறது,அதற்காக கூட்டம் வருகிறது என்றார்.
அதேவேளையில் அரசியல் கட்சிகள் அப்படி இல்லை என்றும் அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சு கேட்பது என்பது வெகுவாக குறைந்துள்ளது என்றும் இன்று மீடியா வளர்ச்சி காரணமாக நீண்ட நேர பேச்சை யாரும் கேட்பதற்கு தயாராக இல்லை என்றும் சுட்டி காட்டினார்.
தொடர்ந்து அண்மையில் குஜராத்தில் கிரிக்கெட் போட்டி நடந்த போது விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் பிராக்டீஸ் செய்வதை பார்ப்பதற்காக நிறைய பேர் போனார்கள் என கேள்விப்பட்டேன் எனவும் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இந்த நிலை உள்ளது எனவும் ஒரு பாடகி வந்தால் கூட நிறைய பேர் போகிறார்கள் என்றும் நகைப்புடன் கூறினார்.
தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் தமிழகத்தில் தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்து இருப்பதாக கூறிய பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து குறித்த கேள்விக்கு,
பதில் அளித்த கார்த்திக் சிதம்பரம்,
எங்களது கட்சியில் உள்ள பலருக்கும் பல கருத்து உள்ளது என்றும் எங்கள் கட்சியில் எல்லோருக்கும் ஒரே சிந்தனை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பார்கள் எனவும்,அவர் அவரது கருத்தை கூறியிருக்கிறார் என்றும் எனவே அவர் கூறியதை அதிகாரப்பூர்வ கருத்தாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது இல்லை எனவும் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய்க்கு ஆதரவு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் ஆதரவு வாக்குகளாகவோ வாக்குகள் சீட்டுகளாகவோ மாறுகிறது என்பதை ஏற்க முடியாது என்றார்.
Hindusthan Samachar / Durai.J