Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் தை மாதம் பிறந்தாலே விழாக்கோலம் பூண்டுவிடும். பொங்கல் திருநாள், ஜல்லிக்கட்டு, மற்றும் திருமண விசேஷங்கள் என வரிசையாக சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பூக்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல்,சேலம் மற்றும் உள்ளூர் பகுதிகளான செக்கனம், எழுதியாம்பட்டி , காட்டூர் , கருப்பூர் , முனியனூர் , லந்தக்கோட்டை , வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கரூர் பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் விளைவிக்கும் பூக்கள் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மல்லிகைப் பூவின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ மல்லிகைப் பூ ₹800 முதல் ₹1,200 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக செடிகளில் பூக்கள் கருகி, வரத்து பாதியாகக் குறைந்துள்ளது.
தை முதல் வாரம் என்பதால் திருமணம், கிரகப்பிரவேசம் மற்றும் பொங்கல் வழிபாட்டிற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, இன்று மல்லிகைப் பூவின் விலை கிலோ ₹12,000 முதல் ₹14,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மல்லிகைப் பூ கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பூ இந்த வாரம் 12,000 முதல் 14,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போன்று முல்லைப் பூ 4,000 ரூபாய்க்கும், ஜாதிப் பூ 4,000 ரூபாய்க்கும், ரோஜா கிலோ 200 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும்,துளசி (4 கட்டு) 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் ஒருபுறம் அதிர்ச்சியடைந்தாலும், விளைச்சல் குறைந்துள்ள நிலையிலும் இந்த உச்சகட்ட விலை தங்களுக்கு ஓரளவு கைகொடுப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்கள் விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி பூக்களை வாங்கி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam