Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)
குடியரசு தினநாள், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது.
இந்த அரசியலமைப்புச் சட்டம் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தை மாற்றி அமைத்தது. மேலும், 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவை ஒரு குடியரசாக மாற்றியது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. 1930 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் அதே தேதியில் பூரண சுயராஜ்யத்தை (முழுமையான சுதந்திரத்தை) பிரகடனம் செய்ததால், அந்த குறிப்பிட்ட நாள் குடியரசு நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதியையொட்டி ராணுவ ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதனை நேரலையாக பார்க்க ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
புதுடெல்லி கடமைப் பாதையில் வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் முழு ஒத்திகையைக் காண்பதற்கான அனுமதிக் சீட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எந்தவித கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குடியரசு தின அணி வகுப்பு ஒத்திகை முன்பதிவு விவரங்கள்:
முன்பதிவு தேதிகள்: ஜனவரி 15 முதல் ஜனவரி 16 வரை.
நேரம்: காலை 9:00 மணி முதல் தினசரி ஒதுக்கீடு முடியும் வரை.
கட்டணம்: இல்லை. முற்றிலும் இலவசம்.
எப்படி முன்பதிவு செய்வது?
நாட்டு மக்கள் இரண்டு வழிகளில் முன்பதிவு செய்யலாம். வெப்சைட் மற்றும் மொபைல் செயலி என இரண்டு வழிகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இணையதளம்: www.aamantran.mod.gov.in என்ற 'ஆமந்த்ரன்' இணையதளம் வாயிலாக நேரடியாகப் பதிவு செய்யலாம்.
மொபைல் செயலி: ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் கிடைக்கும் 'ஆமந்த்ரன்' மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்தும் முன்பதிவு செய்யலாம். குடியரசு தினக் கொண்டாட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை https://rashtraparv.mod.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி கூடுதல் அப்டேட்:
இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை கோலாகலமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக, பாதுகாப்பு அமைச்சகம் ஜனவரி 13 அன்று, கர்த்தவ்ய பாதையில் நடைபெறும் 2026 குடியரசு தின அணிவகுப்பின் முழு ஒத்திகைக்கான இலவச பாஸ்களை அறிவித்தது.
இந்த பாஸ்கள் ஜனவரி 15 மற்றும் ஜனவரி 16 ஆகிய தேதிகளில் கிடைக்கும். அன்றைய தினத்திற்கான ஒதுக்கீடு தீரும் வரை காலை 9 மணிக்கு விற்பனை தொடங்கும்.
77வது குடியரசு தினத்தின் விருந்தினர்கள் யார்?
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
வழக்கமான மரபுகளின் ஒரு பகுதியாக, இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நாளுக்காக ஒரு நாட்டின் தலைவர்களை மத்திய அரசு விருந்தினர்களாக அழைக்கிறது. இந்த மரபுகளில் இருந்து வித்தியாசமாக, ஒரே ஒருமுறை மட்டும், அதாவது 2018-ஆம் ஆண்டில் 10 நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பின் தலைவர்களையும் அழைத்திருந்தது.
Hindusthan Samachar / JANAKI RAM