Enter your Email Address to subscribe to our newsletters

சிங்கப்பூர், 14 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாட்டமாகும். போகி அன்று பழைய பொருட்களை எரித்து குதூகலமாக மேளத்தை அடித்துக் கொண்டாடுவார்கள். பொங்கல் அன்று சூரியபகவானை வழிபட்டு மகிழ்வார்கள்.
மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை வழிபட்டு மாலை நேரங்களில் மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர்களில் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் ஏறியபடி பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல் என மகிழ்ச்சியாக சத்தமிட்டவாறே ஊர்களையும் கிராமங்களையும் சுற்றி வருவார்கள்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக காணும் பொங்கல் அன்று அனைவரும் உறவினர்கள் நண்பர்கள் என பலரது இல்லங்களுக்குச் சென்று மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுவார்கள்.
பொங்கலின் முதல் பண்டிகையான போகிப் பண்டிகை தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளில், தைப்பொங்கல் திருநாளுக்கு முன்னதாக கொண்டாடப்படும் முக்கியமான பாரம்பரிய விழாவாகும்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முதுமொழிக்கேற்ப, வாழ்விலும் இல்லத்திலும் உள்ள தேவையற்றவற்றை அகற்றி, புதிய நம்பிக்கையுடன் தை மாதத்தை வரவேற்பதே போகி பண்டிகையின் அடிப்படை நோக்கமாகும்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று போகிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாலை நேரத்தில் பழைய பயனற்ற பொருட்களை எரித்து, மேளம் அடித்து, சிறுவர்கள் உற்சாகத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார்கள்.
அந்த வகையில் அரசியல் தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
லாரன்ஸ் வோங் இன்று (ஜனவரி 14) எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் கூறுகையில், நமது தமிழ் சமூகத்தினர் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, குடும்பத்துடன் ஒன்றிணைவதற்கும், நன்றியைத் தெரிவிப்பதற்கும், நமது பாரம்பரிய வேர்களை மதிக்கவும், வரவிருக்கும் நம்பிக்கையான ஆண்டை வரவேற்கவும் ஒரு சரியான நேரம் என்று கூறினார்.
மேலும் இந்தச் சந்தர்ப்பத்தில், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கலின் உணர்வை அனுபவிக்க லிட்டில் இந்தியா அல்லது இந்திய பாரம்பரிய மையத்தில் சிறிது நேரம் செலவிட மறக்காதீர்கள் என்றும் சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b