Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 14) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
பொங்கல் திருநாளாம் இந்த மங்கலகரமான நன்னாளில், உலகம் முழுவதும் வாழும் எனது தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடும் வேளையில், நமது விளைநிலங்களைப் பேணி, நமது குடும்பங்களை வளர்த்து, நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் அன்னை பூமிக்கும் சூரிய பகவானுக்கும் அவர்களின் அளவற்ற அருளுக்காக நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தங்கள் திறமை, பக்தி மற்றும் விடாமுயற்சியால் நிலத்தைப் பண்படுத்தி, வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் நமது விவசாய சமூகத்திற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். விவசாயம் மற்றும் கிராமிய வாழ்வின் மையத்தில் கால்நடைகளுக்கு உள்ள புனிதமான இடத்தைக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் உணர்வில் நாமும் இணைகிறோம்.
பழங்கால மரபுகளில் வேரூன்றி, தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் பொங்கல், நமது பாரதிய ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பெருமைமிகு கொண்டாட்டமாகும். இது எல்லைகளைக் கடந்து, உலகெங்கிலும் உள்ள இதயங்களை ஒன்றிணைக்கிறது.
காணும் பொங்கல் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் கொண்டாட்டங்களைச் சிறப்பிக்கிறது. இது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற அந்த ஒருமைப்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளைப் பிரதிபலிக்கிறது.
இந்த பொங்கல் திருநாள் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ஆம் ஆண்டிற்குள் ஒரு வளர்ந்த பாரதத்தை நோக்கி நம்மை வழி நடத்தட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b