Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஜனவரி (ஹி.ச)
பொங்கல் திருநாளின் மகத்துவம் காத்திட தை முதல் நாளில் உறுதியேற்போம்!
பழந்தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளமாக இன்றும் கொண்டாடப்படுகிற 'பொங்கல் பண்டிகை யாவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கும் பெருவிழாவாக அமைந்திட எமது மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்ப்பெருங்குடி மக்கள் எத்தனை எத்தன்னை விழாக்களைக் கொண்டாடினாலும் பொங்கல் பண்டிகை மட்டுமே 'தமிழர் திருநாள்' என்னும் பெருமையைப் பெற்றுள்ளது.
தமிழர்களின் நெடுங்காலப் பாரம்பரியத்தின் ஒரே பண்பாட்டு எச்சமாக விளங்கும் இப்பெருவிழா, மதம், சாதி போன்றவற்றின் தாக்கமில்லாத திருவிழாவாக நடைபெற்று வருவது இதன் சிறப்புகளுள் முதன்மையானதாகும்.
அதாவது, சாதியும் மதமும் ஆதிக்கம் செய்ய இயலாத சகோதரத்துவக் கூறுகளைக கொண்ட ஒரு மாபெரும் தேசிய இனமாகத் தமிழினம் வாழ்ந்தது என்பதற்குச் சான்றாக இன்றும் இது தனித்துவத்தோடு இயங்குகிறது.
உலகமெங்கும் மக்கள் ஏதேனும் மதம் சார்ந்தோ, அல்லது சாதி போன்ற ஏதோனும் ஒரு குலம் சார்ந்தோ இவ்வாறான பண்டிகைகளைக் கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகத் தொடரும்போது, தமிழினம் மட்டுமே அத்தகைய அடையாளங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வெற்றிகரமாக இயங்குவது வியப்பினும் வியப்பாகும்.
இன்று தமிழினம் வெவ்வேறு மதங்களையும் வெவ்வேறு சாதிகளையும் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் முன்னிறுத்தாமல், அல்லது அவற்றின் தாக்கத்திற்கு ஆட்படாமல், தமது தனித்துவத்தைச் சிதையவிடாமல் கட்டுக்கோப்புமிக்க பண்பாட்டு உறுதிப்பாட்டுடன் வீறுநடைபோடுவது நம் ஒவ்வொருவருக்கும் தலைநிமிர்வைத் தருகிறது.
அத்தகைய பெருமையோடு தமிழ் மக்கள் யாவரும் மகிழ்வோடு கொண்டாடும் இப்பெருநாளின் மகத்துவம் சிதைவுறாமல் அது மென்மேலும் செம்மையுறவும்; பண்பாட்டுத் திரிபுவாத கும்பலின் சதிமுயற்சிகளை முறியடித்து அதனைப் பாதுகாக்கவும்: தை முதல் நாளான பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்.
மானுட சமத்துவம் போற்றும் யாவருக்கும் எமது மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ