திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை முதல் சந்தன களப அபிஷேகம்
கன்னியாகுமரி, 14 ஜனவரி (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு நாளை (ஜனவரி
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை முதல் சந்தன களப அபிஷேகம்


கன்னியாகுமரி, 14 ஜனவரி (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு நாளை

(ஜனவரி 15) சந்தன களப அபிஷேக சிறப்பு உற்சவம் தொடங்குகிறது.

இதையொட்டி நாளை காலை நிர்மால்ய தரிசனத்துக்குப் பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவர்கள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருள்கின்றனர். அங்கு அபிஷேகம், தீபாராதனையைத் தொடர்ந்து கருவறைக்கு திரும்புகிறார்கள்.

தொடர்ந்து 9 மணி அளவில் கோவில் பிரகாரத்தை 3 முறை சுற்றி வரும் ஸ்ரீபலி பூஜை நடக்கிறது.

10 மணி அளவில் மீண்டும் உற்சவ மூர்த்திகள் மண்டபத்துக்கு வருகின்றனர். பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் 12 கலசங்கள் வைத்து தந்திரி கோகுல் கலச பூஜை நடத்துகிறார்.

மேலும் பிரம்ம கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. சுமார் 12 மணி அளவில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு களப அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்திற்குப் பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படும்.

இவ்வாறு நாளை முதல் வரும் 26-ம் தேதி வரை 12 நாட்கள் மதியம் களப அபிஷேகம் நடைபெறும். களப பூஜையின் இறுதி நாளான 27-ம் தேதி காலை 10 மணி அளவில் 47 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். பின்னர் மஞ்சள் களப அபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து பெருந்திரு அமிர்து பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b