Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருப்பொருளில் பொங்கல் விழா இன்று (ஜனவரி 14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழக பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறி தன் உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர்,
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழா. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆயிரம் ஆண்டுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது.
திருக்குறளில் கூட விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் பாடல்கள் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தொடர்ந்து மத்திய அரசு உழைத்து வருகிறது.
நமது பூமி நலமுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அறுவடையும் இருக்க வேண்டும்.
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b