Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 15 ஜனவரி (ஹி.ச.)
பாமக தலைவர் அன்புமணி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும். பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுபவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.
உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். பொங்கல் திருநாளில் இயற்கையை வணங்கும் நாம், அதை போற்றவும், காக்கவும் வேண்டும். பொங்கல் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் இயற்கையை காக்க வேண்டியன் அவசியத்தை வலியுறுத்துவதும் ஒன்றாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றம் அதன் தாக்குதல்களைத் தொடங்கி விட்ட நிலையில், அதிலிருந்து மக்களையும், பயிர்களையும் காப்பதற்கான திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும்; அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இயற்கையையும், மக்களையும் காப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் தமிழ்நாட்டை இப்போது பீடித்திருக்கும் கோரப்பிடியிலிருந்து மீட்டு, பாதுகாப்பான கைகளில் ஒப்படைப்பது ஆகும்.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க அதற்கான வாய்ப்பு இன்னும் சில வாரங்களில் நமக்கு கிடைக்கவிருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் தீமைகளை விலக்கி நன்மைகளை நிறைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
அத்துடன், அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும் என்று கூறி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam