அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 32 -பேர் காயம் -5 பேர் மருத்துவமனையில் அனுமதி
மதுரை, 15 ஜனவரி (ஹி.ச.) உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, அதிகாலையில் எழுந்த மக்கள் புத்தாடை அணிந்து, ஒவ்வொரு இல்லங்களிலும் வண்ணக்கோலமிட்டு பொங்கலிட்டு சூர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்  காயமடைந்த 32 பேரில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி


மதுரை, 15 ஜனவரி (ஹி.ச.)

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையையொட்டி, அதிகாலையில் எழுந்த மக்கள் புத்தாடை அணிந்து, ஒவ்வொரு இல்லங்களிலும் வண்ணக்கோலமிட்டு பொங்கலிட்டு சூர்ய பகவானை வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை களை கட்டியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (15-01-26) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியை அங்குள்ள மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இன்று நடைபெறும் இப்போட்டியில், 1,000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன அதன் திமிலை பிடிக்க களமாட 550 காளையர்கள் களம் இறங்கினர்.

இந்த போட்டியில் பங்கேற்ற சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு சுற்றுகளாக போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. 5-வது சுற்று முடிவில் 464 மாடுகள் களம் கண்ட நிலையில், 109 மாடுகள் மட்டும் பிடிபட்டன. இதில் 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அய்யனார்குளத்தை சேர்ந்த விஜயகுமார் 5 காளைகளும், அரவிந்த், குன்னத்தூர் - 4 மாடுகளும், பொன்பாண்டி, கருப்பாயூரணி - 4 மாடுகளும், அருண்பாண்டி கருப்பாயூரணி - 2 மாடுகளும் பிடித்துள்ளனர். இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் மாடுபிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர், பார்வையாளர்கள் 1 என மொத்தம் 32 காயமடைந்தனர்.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல்சிகிச்சைக்காக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b