புதிய கல்விக் கொள்கையால் தாய்மொழிக்கு பாதிப்பில்லை - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) துக்ளக் நாளிதழின் 56-ஆவது ஆண்டு நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள நாரத கான சபாவில் கோலாகலமாக நடைபெற்றது. அரசியல், சமூக, கலாச்சார வட்டாரங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிக
தர்மேந்திர பிரதான்


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)

துக்ளக் நாளிதழின் 56-ஆவது ஆண்டு நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள நாரத கான சபாவில் கோலாகலமாக நடைபெற்றது.

அரசியல், சமூக, கலாச்சார வட்டாரங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, வாசகர் – பேச்சாளர் நேரடி உரையாடல்களாலும், அரசியல் விமர்சனங்களாலும் கவனம் பெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக பாஜக பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது;

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.

மக்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த அவர்,தமிழ் மொழி ஒரு செழுமையான கலாச்சார மற்றும் தகவல் தொடர்பு வலிமை கொண்ட மொழி என்று பாராட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழிக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் எப்போதும் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

பொங்கல் ஒரு ஆழமான வேரூன்றிய இந்தியப் பண்டிகை என்றும், தென்னிந்தியாவில் பொங்கல், வட இந்தியாவில் வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், அவை அனைத்தும் இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறினார்.

தமிழ்நாடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவீதம் பங்களிப்பு அளிக்கிறது என்றும், நாட்டின் முக்கிய பொருளாதார நுழைவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.

திருக்குறள், மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற நூல் என்றும் குறிப்பிட்டார். தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து பேசிய அவர்,இந்தக் கொள்கை பாரம்பரிய விழுமியங்களை நவீன கல்வி நடைமுறைகளுடன் இணைப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

புதிய கல்விக் கொள்கை தாய்மொழிகளை மாற்றவோ, பலவீனப்படுத்தவோ இல்லை என்றும், மும்மொழி கற்றல் தாய்மொழிக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்தக் கொள்கை அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல், எதிர்கால தலைமுறைகளின் வளர்ச்சிக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மும்மொழி கொள்கைக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், இந்தக் கொள்கை எங்கும் திணிக்கப்படவில்லை என்றும், தமிழ் வழிக் கல்வியில் ஏற்பட்டுள்ள சரிவை அனைவரும் இணைந்து கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை மதித்து, பன்மொழித் திறனையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது என்று வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam