Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
அன்புக்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று வி.கே சசிகலா எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டின் கலாச்சார சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் நமது பழமை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்திடும் வகையில்,தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
இவ்வாறு பழமை மாறாமல் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்துவந்த மரபுகளை அழித்திடும் வகையில் தற்போது திமுக தலைமையிலான அரசு மதுரையில் நடந்து வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் விளம்பர பதாகைகளை வைத்து மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் கலாச்சாரத்தோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டை வெறும் ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கமுடியாது.
ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றைக்கும் தமிழர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. இது தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமாக விளங்கக்கூடியது.
ஜல்லிக்கட்டு காளைகளை தங்களுடைய பிள்ளைகளாக வளர்த்து பாதுகாப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வியல் முறையாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள், காளைகளை தங்கள் பிள்ளைகளைப்போன்று அன்புடன் நேசித்து, பராமரித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து, மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல் வீரமாக நின்று விளையாடும் அழகை யாராலும் மறக்க முடியாது.
இத்தகைய சிறப்புவாய்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம் மரக்கம்புகளை கொண்டு வாடிவாசல் அமைப்பதும், மைதானத்தை சுற்றி மரக்கம்புகளால் ஆன வேலிகளை அமைப்பதையும் பார்த்து இருக்கிறோம்.
ஆனால், தற்போது மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வாடி வாசல் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளகம்பி வேலிகளின் மீது திமுக அரசு அதிகமான விளம்பர பதாகைகளை வைத்துள்ளதால் மாடுபிடி வீரர்களுக்கு பெரிய அளவில் இடையூறும், பாதுகாப்பு இல்லாத ஒரு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஒரு சில முரட்டு காளைகள் சீறி வரும்போது மாடுபிடி வீரர்கள் அங்குள்ள கம்பி வேலிகளை பிடித்துதான் மேலே ஏறி தங்களை பாதுகாத்து கொள்வார்கள்.
ஆனால் கம்பிவேலி முழுவதும் அரசின் விளம்பர பதாகைகள் ஆக்கிரமித்து இருப்பதால் தற்போது கம்பிகளை பிடிக்க வழியில்லாமல் மாடுபிடி வீரர்கள் தவிப்பதை பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.
இளைஞர்களின் உயிரை விட இந்த அரசுக்கு விளம்பரம்தான் முக்கியமாக உள்ளதா? இவற்றையெல்லாம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், திமுகவைச் சேர்ந்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அங்கேயே உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே மாடுபிடி வீரர்கள் அணிகின்ற டி-ஷர்ட் முழுவதும் உங்கள் விளம்பரம்தான் உள்ளது. தற்போது அது போதாது என்று விளம்பர பதாகைகளையும் வைத்து அவர்களை ஏன் இவ்வாறு துன்பப்படுத்துகிறீர்கள்.
மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டால் திமுக தலைமையிலான அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். நம் இளைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு அரசே இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கண்டனத்திற்குரியது.
எனவே, இளைஞர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் வகையில் வாடிவாசல் அருகில் உள்ள அனைத்து விளம்பர பதாகைகளையும் உடனே அகற்ற வேண்டும்.
அதே போன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அனைத்து இடங்களிலும் மாடுபிடி வீரர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள விளம்பர பதாகைகளை உடனே அகற்றவேண்டும்.
வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இளைஞர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ