Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து
பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காகத் தமிழக அரசு
சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிளாம்பாக்கத்திலிருந்து சேலம் செல்லக்கூடிய முன்பதிவு இல்லா
பேருந்தில் பயணிகள் ஏறி நீண்ட நேரமாகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்து எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பேருந்திற்குள் இருந்த பயணி ஒருவர்
அங்கிருந்த அதிகாரிகளிடம், பேருந்து எப்போது புறப்படும் எதற்காக இவ்வளவு
நேரம் காக்க வைக்கிறீர்கள் என்று சாதாரணமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயணியின் கேள்விக்கு முறையான பதில் அளிக்க வேண்டிய அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து அந்தப் பயணியைச் சூழ்ந்து கொண்டு கடும்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கேள்வி கேட்ட அந்தப் பயணியைப் பேருந்திலிருந்து கீழே இறக்க அதிகாரிகள்
வலுக்கட்டாயமாக முயற்சி செய்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மிக மோசமான முறையில் அதிகாரி ஒருவர் ஒருமையில் பேசத்
தொடங்கினார்.
நீ என்ன குடிச்சிருக்கியா இரு உன்னை இப்பவே உள்ள தள்ளுறேன் என அந்தப் பயணியை
அதிகாரத் தோரணையில் மிரட்டியுள்ளனர்.
பண்டிகை கால நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ வேண்டிய அதிகாரிகளே
பொதுமக்களிடம் குடிச்சிருக்கியா எனக் கேட்டு வம்பிழுப்பதும், சிறையில் தள்ளிவிடுவேன் என மிரட்டுவதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அநாகரிகமான செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு கடுமையான ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள், மக்களுக்கே அதிகாரத் தோரணை காட்டுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல. பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் ஊருக்குச் செல்ல காத்திருக்கும் பயணிகளின் மன உளைச்சலைப்
புரிந்து கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.
முறையான விளக்கம் அளிக்க வேண்டிய இடத்தில், பயணியை மிரட்டுவதும் ஒருமையில்
பேசுவதும் அந்தத் துறையின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயல்களாகும்.
எனவே, இதுபோன்ற அநாகரிகமான சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நிகழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam