குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு அழைப்பு!
கோவை, 15 ஜனவரி (ஹி.ச.) கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவரது கணவர் பாலாஜி. சங்கீதா கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் கலப்பு த
Kovai Auto Driver


கோவை, 15 ஜனவரி (ஹி.ச.)

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவரது கணவர் பாலாஜி. சங்கீதா கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இருவரும் கலப்பு திருமணம் செய்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

மாதம் 15,000 ரூபாய் வருமானத்தைக் கொண்டு இரு மகன்களையும் படிக்க வைத்தும் வருகின்றனர்.

தற்போது ஒரு மகன் கல்லூரியில் பயின்று வருகிறார். மற்றொரு மகன் பள்ளியில் பயின்று வருகிறார். இந்த தம்பதியனருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இதனை கருத்தில்கொண்டு வருமானத்தில் சிறு தொகையை வீடு கட்ட சேமித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 2.10 லட்சம் பெற்று, கூடுதலாக மாவட்ட கூட்டுறவு வங்கியில் இருந்தும் கடன் பெற்று, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் மூலம் இவர்களின் வீடானது கட்டப்பட்டுள்ளது.

மேலும் சங்கீதா மத்திய அரசின் PMAY BLC திட்டத்தின்கீழ் பயனாளியாகவும் இருந்து வருகிறார்.

அவரது உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கருத்தில்கொண்டு, குடியரசு தின விழா அன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் பேரணியை இவர் நேரில் காணவும், தேநீர் விருந்திலும் கலந்துகொள்வதற்காகவும் இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கீதா கூறுகையில்,

மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பல வருடங்களாக வாடகை வீட்டில் வசித்துவந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவி பெற்று தற்போது சொந்த வீடு கட்டி குடியேறியுள்ளோம்.

இந்த நிலையில் எங்களது உழைப்பை பாராட்டும் வகையில் குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது. எங்களால் இதை நம்ப முடியவில்லை. முதலில் இதுகுறித்து தகவல் வந்தபோது மோசடியாக இருக்கலாம் நம்ப வேண்டாம் என வீட்டிலிருந்தவர்கள் கூறினார்கள்.

பின்னர் தபால் நிலையத்திலிருந்து அதிகாரிகள் வந்து அழைப்பு கடிதத்தை கொடுத்த பின்னரே இது உண்மை என்று அறிந்தோம். இதுவரை கோவைக்குள்ளேயேதான் ஆட்டோ ஓட்டியுள்ளேன். சென்னைக்கு கூட சென்றதில்லை. இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுவரை என் வாழ்வில் கஷ்டங்களை மட்டுமே பார்த்து வந்த நிலையில், வீடு கட்டியதுதான் மகிழ்ச்சி என்று நினைத்திருந்தேன்.

ஆனால் குடியரசுத் தலைவரின் மாளிகையில் இருந்து தற்போது அழைப்பு வந்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளேன்.

ஒரு பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்கிறேன் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN