ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்
புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.) ஈரானில் பொருளாதார சிக்கல்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் ஈரான் அரசாங்கம் மற்றும் அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிரான எதிர்ப்பு சுமார் 2 வாரங்களுக்க
ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இந்தியர்கள்  மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்


புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.)

ஈரானில் பொருளாதார சிக்கல்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் ஈரான் அரசாங்கம் மற்றும் அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிரான எதிர்ப்பு சுமார் 2 வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது.

எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால், அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதில் எதிர்ப்பாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் உண்டானது. இதன் விளைவாக ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் பேரணியாக செல்கிறார்கள். அப்பொழுது அரசாங்கத்திற்கும், அயதுல்லா அலி கமேனிக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த வன்முறையில் இதுவரை 2,572 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், ஈரானில் நடைபெறும் எதிர்ப்புகளை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஈரானில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், போராட்டம் நடத்தும் மக்கள் மீது அரசாங்க படையினர் பாரபட்சமின்றி துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஈரானில் இருக்கும் இந்தியர்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறும்படி இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், இந்தியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கவும், அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்தியர்கள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் மக்கள் தொடர்பில் இருக்கவும், பயண ஆவணங்கள் மற்றும் குடியுரிமை ஆவணங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM