Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 15 ஜனவரி (ஹி.ச.)
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் இணைந்த 'மஹாயுதி' கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது.
இங்கு, சென்ற டிசம்பரில், 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகள் என மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
இதில், 200-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றி ஆளும் மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. 50-க்கும் குறைவான உள்ளாட்சி அமைப்புகளையே காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணைந்த 'மஹா விகாஸ் அகாடி' கைப்பற்றியது.
இந்நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட மஹாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில், 20 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த உத்தவ் தாக்கரே - மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர்.
அதே போல, துணை முதல்வர் அஜித் பவார், தன்னுடைய குருவான சரத் பவாருடன் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சிகளில் கைகோர்த்துள்ளார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில், வஞ்சித் பகுஜன் அகாடி, ராஷ்ட்ரிய சமாஜ் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.
மாநகராட்சி தேர்தலை, ஆளும் மஹாயுதி கூட்டணியில் உள்ள பா.ஜ.க - சிவசேனா இணைந்து எதிர்கொள்கின்றன.
மும்பை, புனே, நாக்பூர் உட்பட 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 இடங்களுக்கு இன்று காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
மொத்தம் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக மும்பையில் 1,700; புனேயில் 1,166 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 3.48 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
25,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சத்ரபதி சம்பாஜி நகர், நவி மும்பை, நாக்பூர், மும்பை, சோலாப்பூர், அமராவதி, புனே உள்ளிட்ட மாநகராட்சிகளில் அனைத்துக் கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
ஆளும் மஹாயுதி கூட்டணியில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்தனர்.
அதே சமயம், உத்தவ், ராஜ் தாக்கரே ஆகியோர் மும்பை, தானே, நாசிக், சத்ரபதி சம்பாஜி நகர் ஆகிய மாநகராட்சிகளில் மட்டும் கவனம் செலுத்தினர்.
Hindusthan Samachar / JANAKI RAM