இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி - நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்து அபார வெற்றி
ராஜ்கோட், 15 ஜனவரி (ஹி.ச.) இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் குழு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலைய
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி - நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்து அபார வெற்றி


ராஜ்கோட், 15 ஜனவரி (ஹி.ச.)

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் குழு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கில் ஆகியோர் களம் புகுந்தனர். ஆரம்பத்தில் ரோகித் சர்மா 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கில் நிலைத்து விளையாடினார். அவர் அரைசதம் அடித்து 56 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்பு வந்த கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதம் அடித்தார். அரை சதம் கடந்த பிறகு பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டிய கேஎல் ராகுல் சதம் அடித்து மிரட்டினார்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 112 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் கிறிஸ்டன் கிளார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை அடுத்து 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டெவான் கான்வே 16 ரன்களிலும், ஹென்ரி நிக்கோல்ஸ் 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த வில் யங்-டேரில் மிட்செலுடன் கூட்டணி சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

வேகமாக விளையாடி அரைசதம் கடந்த வில் யங், 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் டேரில் மிட்செல் சதம் அடித்து அசத்தினார். டேரில் மிட்செல் 131 ரன்கள்(11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்தார். மேலும் க்ளென் பிளிப்ஸ்(32 ரன்கள்) கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

முடிவில் நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா-நியூசிலாந்து தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM