Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.)
ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை வளர்க்கும் வகையில் நடைபெற்ற காசி - தமிழ் சங்கமத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்ற
(ஜனவரி 15) தனது எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
1026-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோம்நாத் மீதான முதல் தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க புனித பூமியான சோம்நாத் சென்றிருந்தேன்.
இந்த நிகழ்ச்சியின் போது, சவுராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் போது சோம்நாத்துக்கு வந்திருந்த சிலரையும், காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கு வந்திருந்த சிலரையும் சந்தித்தேன்.
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பாராட்டு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்தன. எனவே, இந்த விஷயத்தில் சில எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.
தமிழ் கற்காமல் இருப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது நான் கூறியிருந்தேன். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்தவும், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஆழப்படுத்தவும் எங்கள் அரசுக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தகைய முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் காசி-தமிழ் சங்கமம். காசி-தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு 2022-ல் நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், கைவினைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர். அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த முயற்சியின் அளவையும் ஆழத்தையும் விரிவுபடுத்தின. 2023-ம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வில், மக்களுக்கு மொழி ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது.
மூன்றாவது நிகழ்வில், இந்திய அறிவுமுறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில், கல்வி சார்ந்த விவாதங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அதிக அளவிலான பங்கேற்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் 2025 டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. தமிழ் கற்கலாம் என்ற அந்த கருப்பொருள் காசியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அழகான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் காசிக்கு வந்தனர். காசியைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றனர். இந்த முறை பல சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த முறை, காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் குடியரசுத் துணைத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு மைந்தருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆன்மீக மகத்துவத்தையும், தேசிய ஒருங்கிணைப்பையும் இத்தகைய தளங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்து, மிகவும் ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார்.
காசி - தமிழ் சங்கமம் கலாச்சார புரிதலை வலுப்படுத்தி, மக்களிடையே பரிமாற்றங்களை வளர்க்கிறது. அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே நிலையான பிணைப்புகளை உருவாக்கி ஆரோக்கியமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. வரும் காலங்களில், இதை இன்னும் துடிப்பானதாக மாற்ற விரும்புகிறோம். மிக முக்கியமாக, இது ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை வலுவாக வளர்த்துள்ளது. இந்த உணர்வு பல நூற்றாண்டுகளாக நமது பண்டிகைகள், இலக்கியம், இசை, கலை, உணவு வகைகள், கட்டடக்கலை, அறிவுசார் அமைப்புகள் என பலவற்றின் மூலம் செழித்து வளர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Hindusthan Samachar / vidya.b