Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185-ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று (15.01.2026), தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி, லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
- என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக, தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
முல்லைப் பெரியாறு அணையினைப் பெருமுயற்சியோடு கட்டி, அப்பகுதி மக்களின் பஞ்சம் - பசி நீக்கிய பென்னிகுவிக் பெருமகனாரின் குடும்பத்தினரைக் கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின்போது சந்தித்திருந்தேன்.
பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு அவர்களே நம் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள செய்தி கண்டு மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b