பொங்கல் பண்டிகையன்று ராமேஸ்வரத்தில் நகரப் பேருந்துகள் இயங்காததால் வெளியூர் சுற்றுலா பயணிகள் கடும் அவதி!
ராமநாதபுரம், 15 ஜனவரி (ஹி.ச.) தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் புனிதத் தலத்திற்கு இன்று தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வெளியூர் சுற்றுலா பயணிகள் மற்றும்
Rameswaram


ராமநாதபுரம், 15 ஜனவரி (ஹி.ச.)

தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் புனிதத் தலத்திற்கு இன்று தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வெளியூர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

ராமேஸ்வரம் நகருக்கு நாள்தோறும் ஏராளமான வெளியூர் பயணிகள் வந்து செல்லும் நிலையில், பண்டிகை நாட்களில் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும்.

ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் போதிய போக்குவரத்து முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், இன்று நகரப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு வந்த வெளியூர் மற்றும் வெளி மாநில பயணிகள், அங்கிருந்து ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு செல்வதற்காக சுமார் நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வந்த குடும்பங்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாற்று ஏற்பாடாக ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணம் செய்ய முயன்ற பயணிகளிடம், வழக்கத்தை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் விருப்பமின்றி அதிக கட்டணம் செலுத்தி கோயிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக வெளியூர் பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் கூட்டத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் நகரப் பேருந்துகள், சிறப்பு ஷட்டில் சேவைகள் போன்ற போக்குவரத்து வசதிகள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிலையில், இவ்வாறான திட்டமிடல் இல்லாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இனி வரும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலாவது ராமேஸ்வரம் போன்ற முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களில், வெளியூர் பயணிகள் திண்டாடாமல் இருக்க, போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய போக்குவரத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN