Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 15 ஜனவரி (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜோதியம்பட்டி பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ஜோதியம்பட்டி 223-வது நியாய விலை கடை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக கடைபிடிப்பதாக அறிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன், குடிமங்கலம் பகுதியில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட ரூ.3,000 ரொக்க உதவி, பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை போராட்டக்காரர்கள் நியாய விலை கடை முன்பே திருப்பி ஒப்படைத்தனர்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வந்த வழக்கறிஞர் ஈசனை, சில தனியார் கோழிப்பண்ணை நிறுவனங்களிடமிருந்து காவல்துறையினர் பெருந்தொகை பணம் பெற்றுக்கொண்டு, வேண்டுமென்றே பொய்யான புகார்கள் கொடுத்து கைது செய்துள்ளனர் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
இந்த கைது நடவடிக்கை விவசாயிகளுக்கு எதிரான சதி எனவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்த அவர்கள், வழக்கறிஞர் ஈசன் விடுதலை செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என அறிவித்தனர்.
மேலும் உங்கள் பரிசு ரொக்க பணம் 3 ஆயிரத்தை தரையில் வீசியும் பச்சரிசி சர்க்கரை ஆகியவற்றை தரையில் கொட்டியும் சேலைகளை பெண்கள் தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தை மோகன்ராஜ், விஸ்வநாதன் உள்ளிட்டோர் முன்னெடுத்து
நடத்தி வந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN