காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் மர்ம முறையில் மரணம்!
திருப்பூர், 15 ஜனவரி (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொக்கம்பாளையம் கிராமத்தில் நிகழ்ந்த இளம்பெண் மர்ம மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொண்டிக்காட்டு தோட்டம் எனப்படும் பகுத
Death


திருப்பூர், 15 ஜனவரி (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொக்கம்பாளையம் கிராமத்தில் நிகழ்ந்த இளம்பெண் மர்ம மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மொண்டிக்காட்டு தோட்டம் எனப்படும் பகுதியில் பூங்கொடி என்ற இளம்பெண் பிணமாக கிடப்பதாக குண்டடம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தகவலறிந்ததும் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார். மொண்டிக்காட்டு தோட்டத்தில் கிடந்த பெண்ணின் உடல் நிலை பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இருந்தது.

கை, கால் மற்றும் முகப் பகுதிகளில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதுடன், முகம் கடுமையாக சிதைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

விசாரணையில் உயிரிழந்தவர் கொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி என்பதும், அவருக்கு 26 வயது என்பதும் தெரிய வந்தது. அவரது கணவர் அங்கமுத்து வயது 35. இவர்களுக்கு பெமினேஷன் என்ற 7 வயது பெண் குழந்தையும், நிதன்யா என்ற 3 வயது பெண் குழந்தையும் இருப்பதும் போலீசார் மூலம் தெரியவந்தது.

பூங்கொடியின் தந்தை கணேசன் (57), தாய் வசந்தி (44). ஒரே மகளான பூங்கொடி, 16 வயதில் அங்கமுத்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் வரை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாகவும், இரு குழந்தைகளும் பிறந்த பின்னரும் குடும்பம் சுமாராக நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. சமையல் வேலை செய்து வந்த அங்கமுத்து, மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி பூங்கொடியை தாக்கி துன்புறுத்தி வந்ததாக உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த குடும்ப சண்டைகள் காரணமாக பூங்கொடி மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மொண்டிக்காட்டு தோட்டம் பகுதியில் அவரது உடல் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் முகம் சிதைந்த நிலையில் இருப்பது தற்கொலை என்ற கோணத்தை விட கொலை என்ற சந்தேகத்தையும் அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், திருப்பூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அங்கமுத்துவின் செயல்பாடுகள், அவர் கடைசியாக பூங்கொடியுடன் இருந்த நேரம், குடும்ப சண்டைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போலீசார் விசாரணைக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் குண்டடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN