அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 15 ஜனவரி (ஹி.ச.) திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாள
Tiruvannamalai


திருவண்ணாமலை, 15 ஜனவரி (ஹி.ச.)

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும், குறிப்பாக ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஆன்மீக பக்தர்கள் அதிக அளவு திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் இன்று அதிகாலை ஆகம விதிப்படி 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர், அதேபோன்று இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து கோவிலின் ராஜ கோபுரம் நுழைவாயிலில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர், அதே போன்று அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் நமச்சிவாய மந்திரத்தை ஜெபித்தபடி சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது, அது மட்டுமல்லாமல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்த பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN