Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகை, போகி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என, ஒவ்வொரு நாளும் தனி சிறப்பை கொண்டுள்ளது. இன்று (ஜனவரி 15) சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது.
நாளை (ஜனவரி 16) மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டு பொங்கல் அன்று விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தப்படுகிறது.
காலையில் கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அலங்கரித்து விவசாயிகள் மேய்ச்சலுக்கு அனுப்புவர்.
வண்ணக் கயிறுகள், 'ஜல் ஜல்' ஒலி எழுப்பும் சலங்கைகள், ஜிமிக்கி உள்ளிட்ட அணிகலன்களால் கால்நடை களை அலங்கரித்து அழகுபார்ப்பது வழக்கம்.
அந்த வகையில் கோவை மாநகர் ஆர்.ஜி.வீதி, பெரியகடை வீதி, டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் கால்நடைகளுக்கு ஒலி எழுப்பும் மணி வகைகள், அணிகலன்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
இது குறித்து பெரிய கடை வீதி வியாபாரிகள் கூறியதாவது:
கால்நடை விவசாயிகளுக்கு மாட்டு பொங்கலே முக்கிய பண்டிகை. ஏனெனில், வருவாய் நோக்கில் மட்டுமின்றி, குடும்பத்தில் ஒரு நபரமாகவும் நினைத்து கால்நடைகளை வளர்க்கின்றனர். எனவே, மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளை அலங்கரித்து விவசாயிகள் அழகு பார்ப்பர்.
ரேக்ளா மாடுகள், சாதாரண மாடுகளுக்கு என, தனித்தனியே கயிறு, அணிகலன்கள் விற்பனையாகின்றன. கன்று குட்டிகள், பெரிய மாடுகள், காளை மாடுகள், ஆடுகளுக்கென்று தனித்தனி அளவுகளில், அலங்கார பொருட்கள் வந்துள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு டிசைன்களில், பேன்சி பொருட்கள் வந்துள்ளன.
மாராப்பு கயிறு விற்பனை அதிகமாக உள்ளது. மாடுகளின் கழுத்து கயிறு, கருப்பு கயிறு உள்ளிட்டவை ஜோடி ரூ.20 முதல் 50 வரை கிடைக்கின்றன.
'பெல்ட்' உடன் கூடிய சலங்கை வகைகள் சிறியது ரூ.85க்கும், பெரியது ரூ.110க்கும் விற்கிறது. கழுத்துக்கான 'பெல்ட்' ரூ.280க்கு உள்ளன. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு விற்பனை நன்றாகவே உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b