Enter your Email Address to subscribe to our newsletters

கொழும்பு, 15 ஜனவரி (ஹி.ச.)
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏறத்தாழ 30 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ம் வருடம் முடிவுக்கு வந்தது.
இந்த யுத்தத்தின்போது ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடுஞ்செயல்கள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் பற்றி ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில்,நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் - நீதிக்கான நம்பிக்கையைக்கூட என்கின்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிற அந்த அறிக்கை, இலங்கை யுத்தத்தில் நிகழ்ந்த கொடுஞ்செயல்கள், பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களின் அடிப்படையிலே தயார் செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கை யுத்தத்தின்போது, பாலியல் வன்முறை அதிக அளவில் நிகழ்ந்திருக்கிறது என்றும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பயமுறுத்துவதற்கும், தண்டிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்புப் படையினர் பாலியல் வன்முறைகளை நடத்தியிருக்கிறார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த கொடுஞ்செயல்கள் பெரும்பாலும் ஈழத்தமிழ் பெண்கள் மற்றும் விடுதலைப் புலிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக அந்த அறிக்கை சொல்கிறது.
யுத்தத்தின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்கால குற்றங்களுக்கு எந்த நஷ்டஈடும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியிருக்கிறது என அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நிறைய பேர் தொடர்ந்து நாள்பட்ட உடல் காயங்கள், குழந்தையின்மை, மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களால் துன்பப்படுவதாக அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு, ஏறத்தாழ 17 வருடங்கள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
பாதுகாப்பு படைகள் மற்றும் மற்றவர்களால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும் எனவும், சரியான மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஐ.நா. வலியுறுத்தியிருக்கிறது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களை மையமாக கொண்ட சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும், ஒரு சுதந்திரமான சட்ட அலுவலகத்தை நிறுவ வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவியல் மற்றும் சமூக ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM