Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 ஜனவரி (ஹி.ச.)
கோவை, உக்கடம் பகுதியில் அமைந்து உள்ள புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இன்று (ஜனவரி 15) காலை மேம்பாலம் பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கோவில் அருகே பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்த நபர் மற்றும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த இருவர் மீது கார் பலமாக மோதியது.
கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா ? அல்லது தூக்க கலக்கத்தில் காரை ஓட்டினாரா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b