Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 ஜனவரி (ஹி.ச.)
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று ஆண்டுதோறும் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும்.
அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக அளவில் சிறப்பு பெற்றவை.
அதன்படி பொங்கல் பண்டிகை தினமான இன்று
(ஜனவரி 15-ந் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
போட்டியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1,100 காளைகளும், சுமார் 600 வீரர்களும் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியை காண மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஏராளமான பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
இந்த வருடம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் புள்ளியை கணக்கிட ஸ்கோர்போர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்இடி திரையில் வீரர்களின் புள்ளிவிவரம் திரையிடப்படும். இதன்மூலம் புள்ளிகள் விவரம் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். போட்டியில் அதிக காளைகளை தழுவி முதல் இடத்தை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்.
சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்படும். மேலும், இரு சக்கர வாகனங்கள், பீரோ, கட்டில், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை பாலமேட்டிலும் நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b