Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல்,ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்சா தொற்று,நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், வைட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன. முதல் தவணை தடுப்பூசிக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவதில்லை. இதனால் 100 சதவீத தடுப்பூசி இலக்கு அனைத்து இடங்களிலும் எட்டப்படுவதில்லை.
எந்த சுகாதார மாவட்டம் தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கியுள்ளது என்பதை கண்டறிந்து, அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி செயல் திட்டத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி தவணைகள் தவறவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக 11 தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இணைந்து செயல்பட விரும்பும் தனியார் மருத்துவமனைகள், அதுகுறித்து பொது சுகாதாரத் துறைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்று கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்வார்கள். அதில் திருப்தி ஏற்படும்பட்சத்தில் இலவச தடுப்பூசி திட்டத்தை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும்.
தடுப்பூசி மருந்துகளும் அரசு சார்பில் வழங்கப்படும். தடுப்பூசிகள் முறையாக பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணங்களை அரசுக்கு தனியார் மருத்துவமனைகள் அளிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் தொடர்ந்து தடுப்பூசிகள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b