Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்த பகுதிநேர ஆசிரியரை நினைத்து பார்த்தாவது முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றி 12 ஆயிரம் பேரை காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நடந்த போராட்டத்தில் மனம் வருந்தி விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் மரணம் அடைந்துவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் என்.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்த கண்ணன் போராட்டத்தில் கலந்து கொண்டு பணி நிரந்தரம் குறித்து முதல்வர் அறிவிக்கவில்லை என்பதால் மனம் வெறுத்து விஷம் குடித்து மரணம் அடைந்ததற்கு பணி நிரந்தரம் செய்யாமல் இருந்ததே காரணம்.
வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருந்தால் இந்த மரணம் நடந்து இருக்காது. இந்த போராட்டமும் நடந்து இருக்காது. எனவே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை காத்திட பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேலும், உயிரிழந்த ஆசிரியர் கண்ணன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உடனே வழங்க வேண்டும். வெறும் 2,500 ரூபாய் சம்பள உயர்வு கேட்டு போராட வில்லை பகுதிநேர ஆசிரியர்கள் என்பதை கண்டனத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுவும் இனி மாதம் சம்பளம் ரூபாய் 15 ஆயிரம், ஆனால் மே மாதம் சம்பளம் ரூபாய் 10 ஆயிரம் இனி மேல் வழங்கப்படும் என ஆட்சி முடிய உள்ள நேரத்தில் அறிவித்து இருப்பது திமுகவின் பணி நிரந்தரம் வாக்குறுதி நடக்காது என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
எனவே இந்த அறிவிப்பானது வெறும் கண்துடைப்பு, அதுவும் காலம் கடந்த அறிவிப்பு என கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஏற்கனவே உள்ள 12,500 ரூபாய் சம்பளத்தோடு இந்த 2,500 ரூபாய் சம்பள உயர்வு அறிவிப்பால் கிடைக்க போகும் ரூபாய் 15 ஆயிரம் சம்பளத்தை வைத்து கொண்டு மீண்டும் தற்காலிக வேலை செய்தால் இனி எஞ்சிய காலமும் பாதிக்கப்படும்.
எனவே அரசு சலுகைகள் கிடைக்க பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வாழங்க வேண்டும். அப்போது தான் பணிப்பாதுகாப்பு, வாழ்வாதாரம் கிடைக்கும். பொங்கல் போனஸ், இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் இதெல்லாம் இல்லாமல் இனியும் பகுதிநேர ஆசிரியர்களால் வாழ முடியாது.
15 ஆண்டாக செய்து வருகின்ற தற்காலிக வேலையை நிரந்தரமாக்க திமுக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த 12 ஆயிரம் பேரின் கோரிக்கை.
இதற்கு தேவையான நிதியை முதல்வர் மனசு வைத்து ஒதுக்க வேண்டும். இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கிறது. ஆனால் பணி நிரந்தரம் செய்ய மனம் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசு பணம் தரவில்லை என்று சாக்குபோக்கு சொல்லியே இனியும் ஏமாற்றாமல், முதல்வர் சொன்ன திமுக வாக்குறுதி 181ஐ அரசாணையிட்டு பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டமானது சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இந்த ஜனவரி 8ந்தேதி முதல் நடக்கிறது.ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வரின் காவல்துறை தினமும் கைது செய்வது மனிதாபிமானம் ஆகாது.
முதல்வர் தேர்தலில் சொன்னபடி பணி நிரந்தரம் செய்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டி இருப்போம், இப்படி வீதியில் நின்று போராட மாட்டோம். இப்படி உயிரிழப்பு, மன வேதனை அடைந்து கண்ணீர் சிந்தாமல் இருப்போம். இப்போது செய்யாமல் எப்போது செய்ய போறீங்க?. பகுதிநேர ஆசிரியர்களுக்கு இனிமேலாவது ஒரு விடியல் வேண்டும். இதை அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.
எனவே முதல்வர் இனிமேலும் வஞ்சிக்காமல் ஏமாற்றாமல் திமுக தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Hindusthan Samachar / vidya.b