Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 16 ஜனவரி (ஹி.ச.)
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் நேற்று (ஜனவரி 15) தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. உழவர்களின் உழைப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக, விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை படைத்து சர்க்கரை பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழகம் முழுவதும் அசைவ விருந்துடன் பொங்கல் கொண்டாட்டங்கள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன.பொங்கலுக்கு அடுத்த நாளான இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல் நாளில், அசைவப் பிரியர்கள் ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சிகளைச் சமைத்து தங்கள் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்வது வழக்கம்.
இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை, இன்று அசைவ உணவுகளுக்கான தேவை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இறைச்சியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆட்டுக்கறி: ஒரு கிலோ ரூ. 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோழிக்கறி (சிக்கன்): ஒரு கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் மீன் கடைகளில் வஜ்ரம் மீன் ஒரு கிலோ ரூ.1,300-க்கும், கட்லா, ரோகு ஆகியவை ரூ.200-க்கும், பாறை ரூ.170, சிலேபி ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல் ஒருசில அசைவ பிரியர்கள் மீன்களையும், இறைச்சிகளையும் தங்களது வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.
பெரும்பாலான இறைச்சிக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசைவ பிரியர்கள் கடைகளில் காத்திருந்து வாங்கி சென்றனர். இறைச்சி மற்றும் மீன் வியாபாரம் அமோகமாக நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Hindusthan Samachar / vidya.b