Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
கூகிள் டிவியில் ஜெமினி ஏஐ-யை உபயோகிக்கும் வசதி முதலில் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது, அந்த நிறுவனமானது அதனுடைய செயல்திறனை இன்னும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகள் முதலில் TCL ஸ்மார்ட் டிவியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் எதிர்வரும் மாதங்களில் மற்ற கூகிள் டிவிகளுக்கும் வழங்கப்படும்.
இந்த வசதியைக் கொண்டு, கூகிள் டிவி பயனர்கள் தங்களுடைய குரல் கட்டளை மூலம் டிவியை இயக்க முடியும். உதாரணமாக, அலெக்சாவை பயன்படுத்தி குரல் மூலம் டிவியை இயக்குவது போல, கூகிள் பயனர்களும் இனி ஜெமினி ஏஐ-யை பயன்படுத்தி தங்களுடைய ஸ்மார்ட் டிவியை இயக்க முடியும்.
மேலும், டிவி பார்க்கும்போது பிடித்த நிகழ்ச்சிகளை மீண்டும் பார்க்கவோ அல்லது பிடித்தமான நிகழ்ச்சிகளின் பெயரைச் சொன்னாலோ அல்லது குறிப்பிட்ட ஜார்னரை கூறி அதற்கேற்ற சீரிஸ்களைப் பரிந்துரை செய்யுமாறும் கேட்கலாம். உங்களுக்குப் பிடித்த நடிகரின் பெயர் போன்றவற்றை குறிப்பிட்டு நிகழ்ச்சிகளை இயக்கச் சொல்லலாம்.
உதாரணத்திற்கு, தற்போது எல்லோரும் விரும்பிப் பார்க்கும் ஏலியன்களை அடிப்படையாகக் கொண்ட சீரிஸ் என்ன? என்று ஜெமினி ஏஐ-யிடம் கேட்டால், அது நீங்கள் கேட்ட நிகழ்ச்சி அல்லது அதே வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகளைப் பரிந்துரை செய்யும்.
இது தவிர, ஜெமினி ஏஐ வசதியில் உள்ள யூசர் இன்டர்ஃபேஸ் நவீனமாகவும் அதே நேரத்தில் எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிளென்டட் டெக்ஸ்ட் மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்கோர் போன்றவையும் அடங்கும்.
பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், ஜெமினி ஏஐ டிவியை கற்றல் மற்றும் கற்பித்தல் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். உங்களுக்கு எழும் சந்தேகங்களை அதனிடம் கேட்டு பதில்களைப் பெறலாம். கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளைப் பரிந்துரைக்கச் சொல்லலாம்.
மேலும், இது ஏஐ பவர்ட் இமேஜ் மற்றும் வீடியோ சர்ச் வசதியையும் வழங்குகிறது. பயனர்கள் கூகிள் போட்டோஸ் மூலம் குறிப்பிட்ட நபர்கள் அல்லது தேட வேண்டிய இமேஜ் அல்லது வீடியோவை வகைப்படுத்தி, அதைக் கொண்டு ஆர்ட்டிஸ்ட்டிக் அல்லது சினிமேட்டிக் வகையிலான படங்களைப் பெற முடியும்.
இவற்றுள் முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது வாய்ஸ் கண்ட்ரோல்ட் செட்டிங்க்ஸ்தான். திரை மங்கலாக இருந்தால், பிரைட்னசை அதிகப்படுத்தும்படி கூறினால் ஜெமினி ஏஐ திரையின் பிரைட்னசை அதிகரிக்கும். வசனம் கேட்கவில்லை என்றால், ஜெமினி தானாகவே டிவியின் ஒலியளவை அதிகரிக்கும். இவ்வாறு மாற்றம் செய்யும்போது நிகழ்ச்சி தடைபடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வசதியைப் பயன்படுத்த, ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் வெர்ஷன் 14 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களைக் கொண்டிருந்தால் மட்டுமே ஜெமினி ஏஐ-யை உபயோகிக்க முடியும்.
டிவியில் இணைய இணைப்பு மற்றும் கூகிள் அக்கவுன்ட்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வசதி ஒவ்வொரு டிவைஸுக்கும், அந்தந்த யூசர் வசிக்கும் நாடு மற்றும் மொழியைப் பொறுத்து மாறுபடும்.
இந்த புதிய வசதியின் மூலம் கூகிள் டிவி யூசர்கள் மேம்பட்ட பயனர் அனுபவத்தைப் பெற முடியும்.
Hindusthan Samachar / JANAKI RAM