Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 16 ஜனவரி (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மேலமங்கைநல்லூர் கிராமத்தில் இரவு மதுபோதையில் ஒருவர் பொதுமக்களிடம் அரிவாளை காட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் சென்று உள்ளது.
அதன்பேரில் காவல் நிலையத்தில் இருந்து முதல் நிலைக் காவலர் சாமிநாதன் மற்றும் உளவு பிரிவு காவலர் சதீஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு தகராறில் ஈடுபட்டவரிடம் இருந்த அரிவாளை காவலர்கள் பறித்தனர். அப்போது அந்த நபர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த மற்றொரு கத்தியை எடுத்து சுழற்றி போலீசாரை அச்சுறுத்தியுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற காவலர்களை அந்த நபர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், உளவு பிரிவு காவலர் சதீஷின் வயிற்றில் லேசாக கத்தி குத்து விழுந்தது.
முதன்மை காவலர் சுவாமிநாதனுக்கு கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவலர்கள் இருவரையும் கீழே தள்ளிவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.
பின்னர் காயப்பட்ட போலீசார் இருவரும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அங்கு இருவருக்கும் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், போலீசாரை குத்தி விட்டு தப்பி ஓடிய நபர் மேலமங்கநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (40) என்பது தெரிய வந்தது. லாரி ஓட்டுநரான இவரை, போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஆனந்தன் போலீசுக்கு பயந்து இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகே தற்கொலை செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
போலீசாரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற நபர் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / ANANDHAN