Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 16 ஜனவரி
(ஹி.ச.)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் நேற்று 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு மாநில தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தது.
வாக்குப்பதிவு நிறைவில் மும்பை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.
இந்த சூழலில் அனைத்து மாநகராட்சிகளிலும் பதிவான வாக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மும்பையில் மட்டும் 23 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி மும்பை மாநகராட்சியை பாஜக கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.
சமீபத்திய தகவலின்படி மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி 130 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து சிவசேனா (உத்தவ்)-மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கூட்டணி 71 வார்டுகளிலும், காங்கிரஸ் 13 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன.
வெளியாகி வரும் இந்த புள்ளி விவரங்கள் மும்பையில் பாஜகவின் வளர்ந்து வரும் செல்வாக்கை பிரதிபலிப்பதாக உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam