Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.)
கடந்த வருடம் ஜூன் மாதம் 12ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏ.ஐ 171 ரக விமானம், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகரான லண்டனை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது.
விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே, அருகில் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 260 உயிர்கள் பரிதாபமாக பலியாயினர்.
விமான விபத்து குறித்து புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்தை இயக்கிய விமானி கேப்டன் சுமீத் சபர்வாலின் நெருங்கிய உறவினரும், விமானியுமான கேப்டன் வருண் ஆனந்திற்கு சமீபத்தில் விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு இந்திய விமானிகள் கூட்டமைப்பு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து, விசாரணை அமைப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அந்த கூட்டமைப்பு அனுப்பிய நோட்டீஸ்:
குஜராத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்திற்கும், தற்போது சம்மன் அனுப்பப்பட்ட விமானி வருண் ஆனந்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தப்பட்ட விமான இயக்க திட்டமிடல் குழுவிலோ அல்லது சம்பவ இடத்தில் அவர் இருக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் ஒரு சாட்சியாகவோ அல்லது தொழில்நுட்ப நிபுணர் சாட்சியாகவோ அவர் இருக்க முடியாது. விபத்துக்குள்ளான விமானத்தின் தலைமை விமானியான கேப்டன் சுமித் சபர்வாலின் உறவினர் என்பதால் கேப்டன் ஆனந்த் அழைக்கப்பட்டுள்ளார்.
எனவே, விசாரணை நிறைவடையும்முன் அக்குழு, ஒரு முன்கூட்டிய முடிவை எடுத்துள்ளனர். இறந்த விமான குழுவின் மீது பழியை சுமத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிப்படி, விமான விபத்து தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக குடும்ப உறுப்பினர்களை அழைப்பது சட்டவிரோதமானது. எனினும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் கேப்டன் விஜய் ஆனந்த் ஆஜராக தயாராக உள்ளார். ஆனால், அவருக்கு ஏன் சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை.
எனவே, கேப்டன் விஜய் ஆனந்திற்கு சம்மன் அனுப்பியது ஏன் என்பது குறித்து விமான விபத்து புலனாய்வு பிரிவு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM